ரஷ்யா - உக்ரைன் போரால் சிக்கித் தவிக்கும் இலங்கை
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் காரணமாக இலங்கை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன.
மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் வழக்கமான காட்சிகளாகி விட்டன.
சுப்ப மார்க்கெட்டுகளில் உள்ள அலுமாரிகள் முற்றிலும் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையர்கள் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதை இந்தக் காட்சிகள் காட்டுவதாக உள்ளன. பணவீக்கம் காரணமாக பலர் உணவைத் தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
2022ஆம் ஆண்டு பெப்ரவரியில், இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் 70% க்கும் அதிகமானோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். அரசாங்கத்தின் மாதாந்திர சுற்றுலா அறிக்கையின்படி, ரஷ்யாவிலிருந்து 15,340 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் - வேறு எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கவில்லை.
இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முடங்கி விட்டது. இதற்கு முன்பு, கொரோனா பெருந்தொற்று இந்த நாட்டை முடக்கிப்போட்டது. இதுவும் இலங்கை சுற்றுலா துறைக்கு பெரும் அடியை கொடுத்தது.
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் கோதுமை, பெட்ரோலியம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. மேலும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. இலங்கை மிகப்பெரிய அளவிலான கடனில் மூழ்கியுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் இணையதளத்தின்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளுக்கு அடுத்தபடியாக இலங்கையின் கடன் பங்குகளுக்கு அதிக கடன் வழங்குவது சீனாவாகும். இலங்கையின் கடன் அதன் சொந்த அந்நிய செலாவணி கையிருப்புகளை தாண்டியுள்ளது மற்றும் அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன்கள் அந்நாட்டை பொருளாதார அவசரநிலையின் விளிம்பில் தள்ளியுள்ளன.
