உக்ரைனுக்கு வாரி வழங்கிய அமெரிக்கா - ரஷ்யாவின் குற்றச்சாட்டையடுத்து பகிரங்க அறிவிப்பு!
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கிவந்த நிலையில், யுத்தத்தை தாம் ஊக்குவிக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி ப்ளிங்கன் தற்போது தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள மூன்று ரஷ்ய விமான நிலையங்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில் ப்ளிங்கனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்பு
அத்துடன் ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்கா உக்ரைனை ஊக்குவிக்கவோ செயல்படுத்தவோ இல்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக உக்ரைன் கருத்து வெளியிடவில்லை.
உக்ரைனுக்கு, நீண்ட தூரம் தாக்கக் கூடிய ஆயுதங்களை வழங்குவதன் மூலம் "சிவப்பு கோடுகளை" கடக்க வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பலமுறை எச்சரித்துள்ளார்.
பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த, அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யாவுடனான இந்த முறுகல்கள் யுத்த விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற கவலைகளால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணி, கெய்விற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது.
ரஷ்ய விமான நிலையங்கள் மீது தாக்குதல்
கடந்த திங்கட்கிழமை ரியாசான்(Ryazan) மற்றும் சரடோவ்(Saratov) பிராந்தியங்களில் இரண்டு ரஷ்ய விமானநிலைய வெடிப்புகள் பதிவாகியிருந்தன. உக்ரைன் எல்லையை ஒட்டிய குர்ஸ்க்(Kursk) பகுதியில் செவ்வாய்க்கிழமை மற்றொரு தாக்குதல் நடந்ததாக ரஷ்யா கூறியது.
அத்துடன் உக்ரைன் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் போது நாடு முழுவதும் உள்ள இலக்குகள் மீது 70 ஏவுகணைகள் வீசப்பட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
