“இழப்பதற்கு சுதந்திரத்தை தவிர வேறு எதுவுமில்லை” -உக்ரைன் அதிபரின் நெஞ்சை உருக்கும் பதிவு
“எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை” என்று உக்ரைன் அரச தலைவர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைனின் பல பகுதிகளுக்கு ரஷ்ய படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களால் முன்னேற முடியவில்லை பதிலுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஏனெனில், தாய்நாட்டை காப்பதற்காக இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள், இராணுவத்தினருடன் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
மக்களின் இந்த எழுச்சியை ரஷ்ய இராணுவ வீரர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உக்ரைனியர்களின் வீரத்தை பார்த்து ரஷ்ய படையினர் பல இடங்களில் இருந்து பின்வாங்கி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பகுதிகளில், ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைபிடித்துள்ளனர். அவர்களிடம் ஏன் உக்ரைனுக்குள் வந்தீர்கள் எனக் கேட்டால், 'எங்களுக்கு தெரியாது' எனக் கூறுகிறார்கள்.
உக்ரைன் மீது போரை தொடக்கியதற்கு ரஷ்யா உரிய விலையை கொடுக்கும். நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சுதந்திரத்தை இழந்துள்ளோம். அனைத்து வீடுகள், தெருக்கள், நகரங்கள் அனைத்தையும் சீரமைப்போம். உக்ரைனுக்கு எதிராக செய்த அனைத்திற்கும் நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என ரஷ்யாவிற்கு கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
“என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம் எனவும் செலன்ஸ்கி கூறினார். தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் ரஷ்யா மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது. கடவுளிடமிருந்து ரஷ்யாவால் ஒருபோதும் தப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறுகையில், அணு ஆயுத போர் பற்றிய எண்ணம் தொடர்ந்து சுழன்று கொண்டிருப்பது மேற்கத்திய அரசியல்வாதிகளின் கைகளில் தான் உள்ளது. ரஷ்யாவின் கைகளில் அல்ல எனக்கூறியுள்ளார்.
