உக்ரைன் இராணுவ தளத்தை நிர்மூலமாக்கியது ரஷ்ய ஏவுகணை
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறித்த இராணுவ தளம் முற்றாக நிர்மூலமானது.
உக்ரைனிலிருந்து போலந்துக்கு தப்பிச் செல்ல மக்களால் பயன்படுத்தப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
லீவிவ் நகருக்கு வெளியில் உள்ள இராணுவ தளத்தில் ரஷ்யா 30 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்து பல மணி நேரங்களுக்கு பிறகும் அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு தொடர்ந்து செல்கிறது. அதிகாரிகள் அங்கே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 19 வயது மாணவர் டக்னிச் விடாலி, ஏவுகணை தாக்கியதும் வானம் சிவப்பாக மாறியதாக தெரிவித்தார்.
"வெடிப்பு சத்தத்தை கேட்டு நாங்கள் தூக்கத்திலிருந்து எழுந்தோம். அது மிகவும் அச்சமாக இருந்தது" என்றார் விடாலி.
அதுமட்டுமல்லாமல் தனது 25 வயது உறவினர் அந்த இராணுவ தளத்தில் பயிற்சியில் இருந்ததாகவும், தற்போதுவரை தனது குடும்பத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
