விமான நிலையம் செல்ல எரிபொருள் இன்றி தவித்த ரஷ்ய தம்பதி
ரஷ்ய தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய தம்பதிக்கு விமான நிலையம் செல்வதற்கு தேவையான எரிபொருள் கிடைக்காத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கலேவெல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த கலேவெல, தலகிரியாகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் உரிமையாளர் , தம்மிடமிருந்த எரிபொருளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
சுற்றுலா பயணிகள் படும்பாடு
இதனிடையே இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுக்கும் சம்பவம் தம்புள்ளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இருந்து பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, தம்புள்ளை காவல் நிலைய அலுவலகத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரி சந்தன விஜேசேகர, 10 லீற்றர் பெற்றோலை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைக்குமாறு தம்புள்ளை எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் சம்மதம் தெரிவித்திருந்த போதிலும், எரிபொருள் பெற வந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
"எங்களுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு எரிபொருள் தீர்ந்து விட்டால் யார் பொறுப்பு. நாங்களும் இந்த நாட்களில் வரிசையில் இருக்கிறோம்" என எரிபொருள் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறைக்கு ஒதுக்கப்படும் எரிபொருளில் ஒரு பகுதியை வெளிநாட்டு சுற்றுலா வாகனங்களுக்கு வழங்குமாறு உதவி காவல்துறை அத்தியட்சகர் உத்தரவிட்டுள்ளார்.