இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்!! புடின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள் ரஷ்ய அரச தலைவர் புடினின் உத்தரவுக்கு அமைய இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த ரஷ்ய விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயணிகளை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.
ரஷ்யாவின் 'ஏரோபுளோட் ' விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்தே ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தடை விதிக்கப்பட்டமைக்கான பின்புலம்
அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின் முதல் பிரதிவாதியான ஏரோபுளொட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு கடந்த 2 ஆம் திகதி தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330 விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி அறிவித்தார் அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோபுளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்து இந்த தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தது.
இந் நிலையிலேயே ரஷ்யா இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதுவரையும் அந் நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தது.