ரஷ்ய சுற்றுலாதாரிக்கு நீதிமன்றம் விதித்த பாரிய அபராதம்
தொடருந்தை பொருட்படுத்தாமல் தொடருந்து கடவைக்குள் தனது மோட்டார் வண்டியுடன் அநாகரிகமாக நுழைந்த ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவருக்கு போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 1.78 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் தொடருந்து திணைக்களத்திற்கு நட்டஈடாக ரூ.56,000. செலுத்துமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ரஷ்ய பிரஜை லொஸ்கோடு அலெக்சாண்டர், என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துமீறி தொடருந்து கடவையில் பயணம்
ஜனவரி 23, 2023 அன்று தொடருந்து கடவை வழியாக தனது மோட்டார் காரை மற்றொரு பயணியுடன் ஓட்டிச் சென்றவேளை பெலியத்தவில் இருந்து மஹோ நோக்கிச் செல்லும் விரைவு தொடருந்தில் மோதியுள்ளார்.
காயமடைந்த அவரும் மற்றைய பயணியும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீதிமன்றின் உத்தரவு
இந்த சம்பவத்தில் தொடரந்து என்ஜின் மற்றும் சமிக்ஞை அமைப்பு பாரியளவில் சேதமடைந்துள்ளது. தொடருந்து சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு திணைக்களம் இழப்பீடு கோரும் அதே வேளையில், சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த வழக்கு நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த சுற்றுலா பயணி பெப்ரவரி 29 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும், அவர் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
அஹங்கம காவல் நிலைய பொறுப்பதிகாரி நாலக ஜயவீர மற்றும் எஸ்ஐ சந்தன ஆகியோர் அரச தரப்பில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், சந்தேக நபருக்காக சட்டத்தரணிகளான பாமுதி வீரசூரிய மற்றும் சிசிர வீரசூரிய ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |