ரஷ்யாவின் அணு அச்சுறுத்தலுக்கு உக்ரைன் எச்சரிக்கை
ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தை வைத்து அணு அச்சுறுத்தலை ரஷ்யா விடுப்பதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் தென் பிராந்தியத்தின் ஷபோறிஸ்ஷியா நகரில் உள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தை உக்ரைன் மீதான படை நடவடிக்கையின் ஆரம்பத்தில் ரஷ்யா கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர் அணு மின் உற்பத்தி நிலையம் மற்றும் அதற்கு அருகில் உள்ள நகரங்களை இராணுவ தளமாக ரஷ்யா மாற்றியுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அணு மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் அண்மையில் எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், இந்த தாக்குதல் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
தாக்குதல் நடத்துவோரே தமது விசேட இலக்கு
இந்த நிலையில் அணுத் திட்டத்தை கேடயமாக பயன்படுத்தி, தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அவ்வாறு தாக்குதல் நடத்துவோரே தமது விசேட இலக்கு என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் தென் பிராந்தியத்தில் டானீப்பர் ஆற்றின் கிழக்கு கரைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த அணு மின் உற்பத்தி நிலையத்தில் ஆறு அணு உலைகள் காணப்படுகின்றன.
இந்த நிலையத்தைச் சுற்றி தொடர்ந்து இடம்பெறும் யுத்தமானது ஐரோப்பாவின் பெரும்பகுதியை பாதிக்கும் அணுசக்தி பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
கதிரியக்க ஆபத்து
எனினும் அணு மின் உற்பத்தி நிலையத்தை சூழ, தாம் எந்தவொரு தவறான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என ரஷ்யா தொடர்ந்தும் கூறிவருகின்றது.
பிராந்தியத்தில் இடம்பெறும் போரின் போது கதிரியக்க ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் குறித்த அணுத் திட்டத்தை கைப்பற்றியதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
