பொறாமை காழ்ப்புணர்வு காரணமாக நாட்டின் பாடசாலை முறை சீர்குலைக்கப்படுகின்றது : சஜித் ஆதங்கம்
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் வேலைத்திட்டத்தையும், பிரபஞ்சம் பாடசாலை பேருந்து வழங்கும் வேலைத்திட்டத்தையும் பொறாமை காழ்புணர்வு காரணமாக நிறுத்த முயற்சித்து வருவதுடன் இந்த பிரபஞ்சம் திட்டத்தை தடை செய்வது என்பது நாட்டின் பாடசாலை முறையை சீர்குலைப்பதான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சஜித் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலைகள் மேம்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படும் என்று கூறப்படுவதால், இந்நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் 41 இலட்சம் மாணவர் தலைமுறை இதன் மூலம் பயன்பெற்று வலுவடைந்து வருகிறது.
வேலைத்திட்டம்
எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு குழிபறிக்கக் கூடாது அத்தோடு இந்த வேலைத்திட்டங்களை தடைசெய்யும் எண்ணம் இருந்தால் அது பாடசாலையை முடக்கி மேலும் பல சிறைச்சாலைகளை உருவாக்கும் செயலாக கருத வேண்டியுள்ளது.
எந்த தரப்பினருக்கும் சிறைச்சாலைகளை உருவாக்க வேண்டிய தேவையில்லாததுடன் இத்திட்டங்கள் மூலம் ஸ்மார்ட் மாணவனும் ஸ்மார்ட் நாடுமே கட்டமைக்கப்படுகிறது.
பேருந்து வழங்கல்
இந்நிலையில், எவ்வாறான சவால்கள் வந்தாலும் இந்த வேலைத்திட்டத்தை நிறுத்த முடியாது அத்தோடு நாட்டில் வறுமை அதிகரித்துள்ள நிலையில் இத்தருணத்தில் நாட்டின் பாதி பேர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர்.
இந்த வறுமையை ஒழிப்பதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் கல்வியை கருதுவதுடன் கல்வியை வலுப்படுத்துவதன் மூலமும் மற்றும் அறிவை மேம்படுத்துவதன் மூலமும் சிறந்த கல்வியின் ஊடாக கூடிய வருமானம் ஈட்டும் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்கி ஏழ்மையை ஒழிக்க முடியும்.
மேலும் யுவதிகள் பெண்களுக்கு அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் இதன் மூலம் சிறுநீரக தொற்று மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை இல்லாதொழிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |