எதிர்க்கட்சியின் பொறுப்பு: சுட்டிக்காட்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு அனைவரது கருத்துக்களையும் செவிமடுத்து அதன்படி செயற்படுவது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல வண்டல பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார்.
காரணம்
அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயலாளர் திசத் டி.பி.விஜயகுணவர்தன, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதன் போது, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |