தமிழ் மக்களை ஏமாற்றும் சஜித் : சோபித தேரர் கொந்தளிப்பு
தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தலை முன்னிட்டு 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கிற்கு செல்லும் அரசியல்வாதிகளால் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் (omaipe sobitha thero)தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கிற்குச் சென்று அறிவிக்கும் அரசியல்வாதிகள், அது தொடர்பில் தெற்கில் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அனைத்து அரசியல்வாதிகளும் கவனம் செலுத்த வேண்டும் மக்கள் படும் துன்பங்களைக் குறைப்பது அனைத்து அரசியல்வாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றார்.
ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களின் தேவையும் இதுவே ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் சஜித்தின் உறுதிமொழி
இதேவேளை வடக்கிற்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), கிளிநொச்சியில் நடந்த நிகழ்வொன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |