இலங்கையில் புதிதாக முளைக்கப்போகும் 1125 தூபிகள்
இலங்கையில் சசுனட அருண வேலைத்திட்டத்தின் கீழ் 1125 தூபிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 12 ஆவது தூபி ஆனமடுவ துமிந்தராம விகாரைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(04) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சசுனட அருண வேலைத்திட்டம்
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “இன்று எமது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து, மக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது.
ஜீவனோபாயத்தை நடத்த முடியாமல் மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் சசுனட அருண வேலைத்திட்டத்தின் ஊடாக பௌத்த மத விகாரைகளை புனரமைக்கவும், கத்தோலிக்க தேவஸ்தானங்களுக்கு திருத்தம், மஸ்ஜிதுகளுக்குப் புதுப்பொழிவு, தர்மத்தின் ஒளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க எதிர்பார்த்துள்ளோம்.
சமமான இடம்
பௌத்த விகாரைகள் போலவே ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய இடத்தை அரசாங்கம் வழங்காவிட்டாலும், எதிர்க்கட்சி இந்த அனைத்து மத ஸ்தலங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் பௌத்த மதத்திற்கு மாத்திரமன்றி ஏனைய மதங்களுக்கும் சமமான இடம் வழங்கி சக மதங்களின் இருப்புக்கு பாதுகாப்பு வழங்கப்படும்” - என்றார்.
