முக்கியமான கட்டத்தில் சிறிலங்கா - அடுத்த இரு நாட்கள் தீர்மானம் மிக்கவை - சஜித் வெளியிட்ட தகவல்
சிறிலங்கா இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், உள்நாட்டு கடனை மறுசீரமைக்க மாட்டோம் என்று அரசாங்கம் முன்பு கூறியது என்றாலும் அந்த முடிவு மாற்றப்பட்டு உள்நாட்டு கடனை மறுசீரமைக்க தயாராக உள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதனால் நாளையும் நாளை மறுதினமும் நாட்டுக்கு மிக முக்கியமான நாட்கள் எனவும், புத்த பெருமான் போதித்ததைப் போல எது நல்லது எது கெட்டது என்பதை நாம் சரியாக தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கியமான தருணம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (30) விழும் மியமிக்க தலைமுறைக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உழைக்கும் மக்கள் மீதான சுமை
ஐக்கிய மக்கள் சக்தியின் விழுமியமிக்க தலைமுறைக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (30) காலை கொழும்பு சொலிஸ் ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது. இதன்போது கட்சி தலைமை செயலகத்தில் அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.
உழைக்கும் மக்கள், நடுத்தர மக்கள், சாமானியர்களின் சேமலாப நிதியில் கூட இந்த அரசாங்கம் அழுத்தம் செலுத்தி இந்நாட்டு உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளதாகவும் இந்நேரத்தில் சரியான விடயங்களை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி சங்கைக்குரிய தேரர்களின் ஆலோசனையை ஏற்று, எது சரியானது, எது அசுபமானது என்பதை சரியாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், சங்கைக்குரிய மகாசங்கத்தினரின் அறிவுரைகளை ஏற்று மக்களை மையப்படுத்திய பயணத்தை ஒவ்வொரு நிலையிலும் நேர்மையுடனும் உறுதியுடனும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் வளங்களை அபகரித்து மோசடி மற்றும் ஊழலை நடைமுறைப்படுத்தி கொண்டு சென்ற அண்மைக்கால ஆட்சியினால் எமது நாடு தற்போது மிகவும் வறுமை மற்றும் அவல நிலையை அடைந்துள்ளதாகவும்,
இந்நிலையில் இருந்து நாட்டை மீட்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும், தச ராஜ தர்மத்தைப் பின்பற்றி நாட்டை மீட்டெடுக்கும் இந்தப் பயணத்தில் சங்கைக்குரிய மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய சக மதத் தலைவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளையும் ஏற்று பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
