அரச ஊழியர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள்...! சபையில் அம்பலப்படுத்திய எதிர்க்கட்சி
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, இருந்ததும் இல்லாமல் போய்விட்டது என்று அரச ஊழியர்கள் குறிப்பிடுகிறார்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena ) தெரிவித்துள்ளார்.
அரசு பொய்யுரைத்திருந்தால் அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ரோஹித அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04.03.2025) உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படவில்லை.
வேட்புமனுத்தமாக்கல் நிறைவு பெறும் தினத்தன்று வாக்கெடுப்பு திகதியை அறிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தாமதப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. விரைவாக திகதியை அறிவியுங்கள்.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தும். தேசிய மக்கள் சக்தி இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்துள்ளது.
ஆகவே இந்த தேர்தல் அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானது. அரசாங்கத்தின் குறை, நிறைகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். பேசுவதை குறைத்து விட்டு செயற்படுங்கள் என்று அரசாங்கத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அரச ஊழியர்களின் சம்பளம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இருந்ததும் இல்லாமல் போய்விட்டது என்று அரச சேவையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யார் குறிப்பிடுவது உண்மை. புத்தாண்டுக்கு முன்னர் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும். அரசாங்கம் குறிப்பிடுவதை போன்று சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரச சேவையாளர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
பொய்யுரைத்திருந்தால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள். ஆகவே இடம்பெறவுள்ள தேர்தல் அரசாங்கத்துக்கு தீர்மானமிக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena ) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
