எரிவாயு கொள்வனவின் போது 10 பேருக்கு தரகு பணம்: கோடிஸ்வரராக மாறிய அரசாங்கத்தின் ஆதரவாளர்
10 இடைத் தரகர்களுக்கு தரகு பணம் கொடுக்க வேண்டியதன் காரணமாக சிறிலங்கா மக்களுக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யா, இந்தியாவுக்கு மிக குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்து வருகிறது.
எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யவில்லை.
ரஷ்யா- உக்ரைன் போர் ஆரம்பிக்கும் முன்னர் ரஷ்யா எரிவாயு நிறுவனத்திடம் இருந்து சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு இருந்தது.
எனினும் இடைத் தரகர்கள் ஊடாக அதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றிய அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் எரிவாயு கொள்வனவு செய்யும் கொடுக்கல், வாங்கல்கள் மூலம் மிகப் பெரிய கோடிஸ்வராக மாறி இருப்பதாகவும் அவருக்கு சொந்தமான பணம் சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிய நாடுகளில் சிறிலங்காவிலேயே அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
