நீங்கப்போகும் தட்டுப்பாடு : இன்றிரவு வருகிறது உப்பு கப்பல்
தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து(india) இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று இரவு இலங்கைக்கு(sri lanka) வர உள்ளது என்று வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்.
3,050 மெட்ரிக் தொன் உப்பு இன்றிரவு (மே 21) நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இருப்பில் தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெட்ரிக் தொன் உப்பும், தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மாதாந்திர உப்பு தேவை
நாட்டின் மாதாந்திர உப்பு தேவை 15,000 மெட்ரிக் தொன் ஆகும், மேலும் ஆண்டு தேவை 180,000 மெட்ரிக் தொன் ஆகும்.
இலங்கை தனது உப்பு அறுவடையை யால மற்றும் மகா என இரண்டு பருவங்களில் மேற்கொள்கிறது. யால பருவ அறுவடை பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரையிலும், மகா பருவ அறுவடை ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஒக்டோபர் நடுப்பகுதி வரையிலும் இருக்கும்.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை
இருப்பினும், கடந்த ஆண்டு மகா பருவத்தில் பெய்த கனமழை காரணமாக, எதிர்பார்த்த அளவு உப்பு அறுவடை செய்யப்படவில்லை, இதனால் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
