தமிழர் பிரச்சினையில் ஐ.நாவின் தலையீடு - கூட்டமைப்பின் தலைவர் இடித்துரைப்பு
இலங்கையில் அண்மைய காலமாக சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவாதக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த சிங்களமயமாக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக மார்க்-அன்ட்ரூ பிரான்ஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை நேற்று(30) நேரில் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இரா.சம்பந்தன் வலியுறுத்தல்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது பற்றி எதிர்வரும் காலங்களில் விரிவாகப் பேசலாம் என மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு தசாப்தம் கடந்துள்ள போதிலும் அது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு
அவசியமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின்
இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸிடம் வலியுறுத்தியுள்ளார்.
