மட்டக்களப்பில் பதற்றம் - சாமி ஆடியவர் உயிரிழப்பு : மற்றொருவர் மீது கத்தி குத்து
மட்டக்களப்பு - ஏறாவூர் (Eravur) பிரதேசத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் போது சாமி ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்வம் நேற்று (11.07.2025) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏறாவூர் - களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் சாமி ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சாமி ஆடிக் கொண்டிருந்த ஒருவர் மீது இன்னொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : கனகராசா சரவணன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
