24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! ஆவேசத்தில் சரத் பொன்சேகா
தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்து இருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பல மதிப்புமிக்க பொருட்களை திருடி விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த தரப்பின் சதி
அதன்படி, விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்தவுக்கு சொந்தமான எந்தவொரு தனிப்பட்ட உடைமைகளும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அரசாங்கப் பொருட்களின் பட்டியலின்படி அவற்றை வரிசைப்படுத்திய பின்னர் ஏனையவற்றை அகற்றுவதாக மகிந்த தரப்பு அறிவித்தது திருடப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் நோக்கில் என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து தொடர்புடைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் அவற்றில் தங்கியிருந்தாகவும் எனவே இவர்கள் இருவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட விசாரணை
மேலும், ராஜபக்ச குடும்பம் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் இருந்தும், அவர்கள் இன்னும் அரச வளங்களையும் மக்களின் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கம் ஊழலை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்கிறதாகவும், ஆனால் மகிந்த மீது சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த அரசாங்கம் நாட்டை சீர்செய்ததாகக் கூற முடியாது என பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மகிந்த ராஜபக்ச மீது உள்ள குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு உயர்மட்ட விசாரணை அல்லது ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் இது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
