சஜித்துடன் இணைவது உறுதி முடிவல்ல: எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார் டலஸ்
எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி வரவிருக்கும் அதிபர் தேர்தலை கருத்திற்கொண்டு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, நாங்கள் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என தெரிவித்தார்.
அண்மையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து பிரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி எதிர்வரும் அதிபர் தேர்தலை கருத்திற்கொண்டு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தனர்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை எம்.பி.க்கள் மூவரும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தும் அதேவேளை, நாங்கள் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என்பதை தெளிவுபடுத்தினர்.
பொதுமக்களின் நிதி நெருக்கடி
தவிரவும், அவர்கள் தங்கள் தனித்துவமான அரசியல் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் முடிவை வலியுறுத்தினார்கள்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், "இந்த கூட்டணியின் அவசியத்தை எடுத்துரைத்தார், தவிரவும் நாட்டில் நிலவும் தேசிய நெருக்கடியை மேற்கோள் காட்டி, வரி மற்றும் விலை உயர்வுகள், குறிப்பாக எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அதிகரிப்பு காரணமாக பொதுமக்களின் நிதி நெருக்கடி பற்றியும் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சியுடன் ஒத்துழைக்க அவர்களிடையே காணப்படும் ஒருமித்த கருத்தை அவர் எடுத்துரைத்தார், அவர்களின் கூட்டு நடவடிக்கையின் நேரம் குறித்தும், வரவிருக்கும் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூட்டணியை விரைவாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையம் வலியுறுத்தி, "கேக்கை விரைவில் ஐஸ் செய்ய வேண்டும்" என்றார்.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.