பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கம்பளை (Gampola) - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நேற்று (15) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”குறித்த பாடசாலை சிறுமியை கடந்த 11 ஆம் திகதி வானில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
காவல்துறையினர் விசாரணை
அதன்படி, தவுலகல காவல் நிலையமும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளின் குழுக்களும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
இதன் விளைவாக, இந்தக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை 13 ஆம் திகதி அம்பாறை நகரில் காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமியும் பாதுகாப்பாக காவல்துறையினரினால் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (14) சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை காவல்தறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கடத்தலுக்காக சந்தேக நபர்கள் வந்த வானும் காவல்துறையினரினால் கண்டுபிடிக்கப்டபட்ட நிலையில், அதன் சாரதி பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் குறித்து தவுலகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |