அடிதடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு..!
தாக்குதல் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 5 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் 05 பேர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் இன்று மாலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணை
இதன்போது, 5 பாடசாலை மாணவர்களும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் பண்டாரவளை காவல்துறை நிலையில் முன்னிலையாகுமாறு பண்டாரவளை பதில் நீதவான் கெனத் டி சில்வா உத்தரவிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களிலும், மின்னணு ஊடகங்களிலும் பரவியதையடுத்து, அது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. பின்னர், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் சண்டையிட்ட மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
