இலங்கை விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதி: முக்கிய தரப்பினருடன் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் சிறிலங்கா அரசாங்கத்தின் பல முக்கிய தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறார்.
இதன்படி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஸ்கொட் நேதன் நேற்றைய தினம் சந்தித்துள்ளதுடன், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதி ஒத்துழைப்பு பிரிவின் இலங்கையுடனான கூட்டாண்மை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக்களில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பங்கேற்றுள்ளதுடன், குறித்த சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்(x) தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஒத்துழைப்பு
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளையும் வங்கி தரப்பினரையும் சந்தித்து அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஸ்கொட் நேதன் நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதி ஒத்துழைப்பு பிரிவு இலங்கையில் இதுவரை 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாக ஸ்கொட் நேதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
அத்துடன், இலங்கையின் தனியார் துறையை மேம்படுத்துவது மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவுமெனவும் அவர் சிறிலங்கா அதிபருக்கு உறுதியளித்துள்ளார்.
.@DFCgov CEO Nathan and I met with President @RW_UNP to discuss economic reforms based on good governance and efforts towards attracting quality investment; the United States is committed to supporting inclusive growth by empowering SL’s private sector. pic.twitter.com/rfmDHbu2cw
— Ambassador Julie Chung (@USAmbSL) November 7, 2023
மேலும், இலங்கையின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின் போது ஸ்கொட் நேதன் கலந்துரையாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து, வலுவான தனியார் துறை மற்றும் தனியார் மூலதனத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக அமைந்துள்ளதென கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட ஆற்றல் செயல்திறன் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுகள் குறித்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் ஸ்கொட் நேதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
