ரைட்டன் கலத்தின் பிராணவாயு முடிவடையும் அபாயக்கட்டம்! இறுதி நம்பிக்கையுடன் தேடுதல்
பிராணவாயு முடிவடையும் அபாயக்கட்டம்
(22/06/2023 - 07.30 PM)
காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களை உயிருடன் மீட்கும் நம்பிக்கைகள் அருகிவரும் நிலையிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த கலத்தில் உள்ளவர்களின் சுவாசத்துக்கு தேவையான பிராணவாயு இன்றுடன் முடிவடையும் என அஞ்சப்படும் நிலையில், இந்தக் கலத்தைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள செயற்பட்டு வருகின்றன.
ரைட்டன் கலம் காணாமல் போய் 96 மணி நேரமாவதால் இன்று மீட்பு பணிகள் வெற்றியடையாமல் விட்டால் உயிரிழப்பு துன்பியல் நிகழும் சாத்தியங்கள் உள்ளன.
தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்டுவரும் sonar devices எனப்படும் ஒலியியல் கருவிகளில் நேற்று சில் சத்தம் பதிவாகியிருந்ததால் திடீர் நம்பிக்கை ஏற்பட்டாலும், இப்போது அந்த ஒலிகள் குறித்த கலத்தில் இருந்து வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 3,800 மீட்டர் ஆழத்தில் நூற்றாண்டு கடந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவை காண்பதற்காக 5 பேருடன் சென்ற இந்த ரைட்டன் கலம் கடந்த ஞாயிறு அன்று தனது தொடர்பை இழந்திருந்தது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் தானாகவே மேற்பரப்புக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அது இதுவரை நீருக்கு மேலே வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
பயணித்தவர்களை மீட்க முடியும் என நம்பிக்கை
(22/06/2023 - 01.30 PM)
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றிருந்த நிலையில், காணாமல் போன ரைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கியை தேடும் பணிகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்களை மீட்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டாலும், அவர்களை உயிருடன் மீட்பதென்பது அதிசயம் என ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்திலாந்திக் கடற்பரப்பில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் ஒரு சில மணித்தியாலங்களுக்கு தேவையான ஒக்ஸிஜனே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறிய நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகளில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தேடுதலின் போது அதிகமான சத்தத்தைக் கேட்க முடிந்த போதிலும், அது எங்கிருந்து வருகின்றது என்பது தெளிவாக தெரியவரவில்லை என அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக கப்டன் ஜெமி ஃபெடரிக் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறிய நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தாம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்து பேருடன் பயணித்த குறித்த நீர்மூழ்கி கப்பலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்தது.
இந்த நிலையில் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தாலும் அதனை சென்றடைவதற்கு சில மணிநேரங்கள் எடுக்கும் என ஆழ்கடல் ஆய்வாளரான கலாநிதி டேவிட் காலோ கூறியுள்ளார்.
ரைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்களை மீட்பது என்பது அதிசயமான ஒன்றாக இருக்கும் என்ற போதிலும் அவர்களை கண்டுபிடிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலின் ஆழத்தில் இருந்து சில அசாதாரண ஒலி
(21/06/2023 - 07.00 PM)
அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவை காண்பதற்காகச் சென்ற ரைட்டன் கலத்தில் உள்ளவர்களை உயிருடன் மீட்பதற்குரிய இறுதிநேரப் பேராட்டம் இடம்பெற்றுவருகிறது.
இந்தத் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலியியல் கருவிகளில் கடலின் ஆழத்தில் இருந்து சில அசாதாரண ஒலி பதிவாகியுள்ள நிலையில், இந்தப் பதிவு பதியப்படும் வரை தேடுதல்கள் இடம்பெற்றிருந்தன.
இறுதிநேரப் போட்டம்
பரந்து விரிந்த ஆழமான அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் ஒரு சிறிய வாகனத்தின் அளவேயுள்ள ஒரு குட்டிக் கலத்தை தேடும் பணி கடினமாக இருந்தாலும், இது 5 மனித உயிர்களின் இறுதிநேரப் போட்டம் என்பதால் ரைட்டன் கலத்தை தேடும் பணிகள் தீவிரப்பட்டுள்ளன.
இன்னும் சொற்ப மணிநேரத்துக்கே அந்தக் கலத்தில் ஒட்சிசன் இருக்கும் என்பதால் இந்தப் பதிவு பதியப்படும் வரை காலத்துடன் ஒரு பந்தயம் வைத்து இந்த ஓட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தத் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலியியல் கருவிகளில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இடிப்பது போன்ற ஒலிகள் பதிவாகியுள்ளதால் திடீர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தேடுதலில் ஈடுபட்டுள்ள கனேடிய விமான கண்காணிப்பில் தண்ணீரில் ஒரு வெள்ளை செவ்வகப் பொருள் அவதானிக்கப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்த நீருக்கடியில் இயக்கப்படும் தேடுதல் கருவிகள் அனுப்பட்டுள்ளன.
தேடுதல் பணி
கடலுக்கு அடியில் 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவை காண்பதற்காக 5 பேருடன் சென்ற இந்த ரைட்டன் கலம் இடையில் தனது தொடர்பை இழந்திருந்தது.
இதனையடுத்து ஏறக்குறைய 20,000 சதுர கிலோமீற்றர் கடல் பரப்பில் சிக்கலான தேடுதல் நடவடிக்கையொன்று அமெரிக்க கடலோர காவல்படை தளபதிகளின் தலைமையில் இடம்பெற்று வருகிறது.
தற்போது கனடாவின் கடற்படை மற்றும் விமானப்படையும் அதேபோல, பிரான்ஸ் நாட்டு ஆய்வுக் கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.