ஆயுதமற்ற புரட்சியினை முன்னெடுப்போம்! எதிர்க்கட்சித் தலைவர் சூளுரை (படங்கள்)
இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் மேற்கொள்ளப்பட்ட நிராயுத பாணியிலான அமைதியான சிந்தனைப் புரட்சியினால் நமது நாடும் நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் இலவசக் கல்வியைப் பெற்றுக் கொண்டது போல அவ்வாறனதொரு புரட்சிக்கு நிகரான ஆயுதமற்ற முற்போக்கு புரட்சியை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மேற்கு வித்யாபிரதீபா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வியாபிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அன்று போலவே இன்றும் நம் நாட்டில் இதற்கு எதிராக ஒரு குழுவினர் செயற்படுகின்றனர்.
இதனாலயே பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் டிஜிட்டல் உபகரணங்களை பகிர்ந்தளிப்பது பயனற்றது என சிலர் கூறுகின்றனர்.
நவீனத்துவக் கல்வி மூலம் இளைஞர்கள் அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற்றால் அதை ஒரு பாரதூரமான சமூகப் பிரச்சினையாக சித்தரிக்கிறது அந்த பக்கச்சார்பான கூட்டம். தமக்கு விசுவாசமான பக்கசார்பான அடிமைகள் உருவாகாத போது அவர்கள் அதை விரும்புவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மேற்கு வித்யாபிரதீபா வித்தியாலயத்திற்கு எட்டு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் ரூபா (846,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.





