மும்பை நகரில் பரபரப்பு! 400 கிலோகிராம் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவின் மும்பை நகரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள விநாயகர் திருவிழாவை முன்னிட்டு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை முழுவதும் 34 வாகனங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் குறுஞ்செய்தி செய்தி வெளியானதை அடுத்து, முழு நகரமும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
400 கிலோகிராம் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள்
போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்ணுக்கு இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
10 நாட்களுக்குப் பிறகு, நாளை நடைபெறும் அனந்த் சதுர்த்தி நிறைவு விழாவில் 400 கிலோகிராம் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் வெடிகுண்டுகளாக வெடிக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-ஜிஹாதி பயங்கரவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரால் இந்த செய்தி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக 14 பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் குண்டுகளை வெடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு கோடி மக்களைக் கொலை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவிப்பு
சமீப காலமாக, இந்தியாவில் விமானங்கள், பொது இடங்கள், பாடசாலைகள் போன்றவற்றை குறிவைத்து மிரட்டல் செய்திகள், அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றைப் பெறுவது வழக்கமாகிவிட்டது.
இருப்பினும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புப் படையினர் ஏதோ ஒரு வகையில் தயாராக இருந்தாலும், இந்தச் செய்தியால் மும்பை பதற்றமடைந்துள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் கடுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.
நாளை லட்சக்கணக்கான மக்கள் மும்பையின் தெருக்களில் திரள உள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
