கோட்டை நீதிமன்றம் அருகே பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: சலே தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, தடுப்புக்காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை ஆராய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மனநல நிபுணர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவ சபை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவில், மருத்துவப் பரிசோதனையை கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கையை அடுத்த விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

முதலாம் இணைப்பு
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்த நீதிமன்ற விசாரணை காரணமான கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியையும் பாதுகாப்பதற்காக, பெருமளவிலான காவல்துறை சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளும் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேயை, சிறப்பு மருத்துவர்கள் குழுவின் முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கை கோருமாறு தெரிவிக்கப்பட்டது.
திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கை
இது குறித்து சுகாதார வைத்திய சேவைகள் தலைமை இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று (10) அறிவிக்கப்பட உள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 4-ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சலே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், இது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்தது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்