முறையற்ற செயல் - சுமந்திரனுக்கு செல்வம் எம்.பி. பதிலடி
தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்து வர வேண்டும் என்று சொல்வது முறையற்ற செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikkalanathan) தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிகளை வைத்து தீர்வு விடயத்தை பார்க்க முடியாது. சுமந்திரனுக்கும் இது தெரியும் என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்றையதினம் (15.12.2024) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சனை சார்ந்த விடயம்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சனை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவிற்கு ஆதரவாக மற்றக்கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை.
ஒன்றாக இணைந்து ஒரு மேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போதே அது வலுவானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.
அதன்மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையினை முன் வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்யமுடியும்.
தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்து வரவேண்டும் என்று சொல்வது முறையற்ற செயல்.
அரசாங்கத்தின் பார்வை
தேர்தல் வெற்றிகளை வைத்து இதனை பார்க்க முடியாது. ஒற்றுமையான தீர்வு திட்டத்தை முன்வைக்கின்ற போதே எமது மக்களும் அதை விரும்புவார்கள்.
அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமது பக்கம் திருப்ப முடியும். தனித்தனியாக செயற்பட்டால் அதை வைத்து அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.
பிரிந்து சென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம். எனவே நாங்கள் செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியற்ற ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
சுமந்திரன் அவர்களுக்கும் இது நன்றாக தெரியும். அவரும் ஒத்துவருவார் என்று நினைக்கிறேன். தமிழரசுக்கட்சியும் ஒத்துவரும் என்று நினைக்கிறேன்.
அரசியல் அமைப்பு உருவாக்கம்
இதேவேளை அரசியல்அமைப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்தகாலங்களில் தமிழரசுக்கட்சி தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்துள்ளது.
சில வரைபுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே மற்றவர்கள் எமது நிலைப்பாட்டோடு இணைந்து செயற்ப்பட முன்வந்தால்.
அதில் எந்த ஆட்சேபனையும் இருக்கப்போவதில்லை. நாம் தமிழர்களின் பிரதான கட்சி, இந்த தேர்தலில் வடகிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் ஆசனங்களை பெற்ற ஒரேயொரு கட்சி என்று எம்.எ. சுமந்திரன் நேற்றயதினம் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |