மாலை மரியாதையால் சலசலத்த செங்கலடி பிரதேச சபை!
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை, மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்பதனால், மக்களால் வழங்கப்பட்டாலும், மாலை மரியாதையை எதிர்பார்த்து வேலை செய்வது அவசியமற்ற ஒன்றுதான்.
இந்த கோரிக்கை ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரால் கோரப்பட்ட நிலையில் அங்கு நடந்ததாக கூறப்படும் சம்பவம் கொஞ்சம் சமூகத்தை விசனிக்க வைக்கிறது.
பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால்கொண்டுவரப்பட்ட பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது புறக்கணிக்கப்பட்டமை ஜனநாயக அமைப்பொன்றின் சுதந்திரம் மீதான கேள்வியை எழுப்புவதாக கருதப்படுகிறது.
தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரயோகித்து அதனை தவிசாளர் தள்ளுபடி செய்ததாகவும் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாரம் என்பது மக்களுக்கானதாஃ சுயமரியாதைக்கானதா?
சம்பவத்தை ஆராய்ந்தால் அதனை புரிந்துக்கொள்ள முடிகிறது.
மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தளவாய் செங்கலடி வட்டார உறுப்பினர் செ.நிலாந்தன் பிரேரணை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.
எனினும் இதனை அக்கட்சியை சேர்ந்த அதாவது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், NPP உறுப்பினர்கள் , மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தவிசாளர் குறித்த பிரேரணையை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களிடம் இருந்தோ அல்லது பொது அமைப்புகளிடம் இருந்தோ மாலை, மரியாதைகளை பெறுவது இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பானது என்று நிலாந்தனின் விவரிப்புக்கள் அமையப்பெற்றுள்ளன.
வீதிகள் உட்பட ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் ஒப்பந்ததாரர்கள்,அரச அதிகாரிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ மாலை மரியாதை செய்வது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவதை போன்றது என்றும் அவரது வாதங்கள் எழுந்துள்ளன.
எனவே முன் உதாரணமாக ஏறாவூர் பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் போது மாலை மரியாதைகளை தடை செய்யுமாறு பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் குறித்த பிரேரணையை இன்றைய தினம் கொண்டுவந்துள்ளார்.
ஆனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு முதல் கொண்டு சிற்றூண்டி வரை மக்கள் வரிப்பணத்திலே வழங்கப்படும் பின்னணியில் மாலை மரியாதை கௌரவிப்புகளையும் தடை செய்ய முடியாது என கூறிய தவிசாளர் குறித்த பிரேரணையை தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
மாலை மரியாதைகளுக்காகவா அரச அதிகாரிகளும், பிரதேச சபை உறுப்பினர்களும் பணியாற்றுகின்றனர்? இது வாதிட்ட அரசியல்வாதியின் முக்கிய கேள்வி...
மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள், மக்களின் பணத்தில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மாலை மரியாதை வேண்டும் என்று கூறுவது சிறப்பானதல்ல என்பது ஜனநாயக சமூக பற்று கொண்ட சேவையாளரின் எண்ணமாக காணப்படுகிறது.
ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு மாத்திரம் விதிவிலக்கல்ல... மக்கள் வரியில் மக்களுக்காக சேவை செய்யும் சேவையாளரின் மரியாதை என்பது சேவையின் ஊடக மக்களால் வழங்கப்படவேண்டுமே தவிர எதிர்பார்ப்புகளுக்கான அங்கீகாரமாகிவிட கூடாதென்பதே கேள்வி எழுப்பிய உறுப்பினரின் நிலைபாடாகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்