இலங்கையில் மீண்டும் அதிதீவிர நெருக்கடி
எரிபொருளுக்கான தட்டுப்பாடு
இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினமும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்றைய தினம் இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பேருந்து மற்றும் தொடருந்துகளில் அளவுக்கு அதிகமான மக்கள் ஏற்றப்பட்ட நிலையில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காணொளிக் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு
இவ்வாறான சூழலில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிகப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
நேற்றுமுன் தினம் தரையிறக்கப்பட்ட எரிவாயு, தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மூன்று வாரங்கள் செல்லும் என லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

