எழுவர் விடுதலை விவகாரம்- தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் அனுமதிக்கு காத்திருக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்தை ஆளுநரின் அனுமதிக்கும் அனுப்பி வைத்தது. இதன்பேரில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், சிறையில் தன்னை சட்டவிரோதமாக அடைத்துள்ளதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரவிச்சந்திரனும் மனுத்தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதால் இரு வாரங்களுக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எழுவர் விடுதலை தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர், "ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27 ஆம் திகதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுவிட்டது" என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "ஏழு பேரின் மரண தண்டனை என்பது உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அரசு தன்னை விடுதலை செய்வதற்கு முடிவெடுத்த நிலையில் அதற்கு வாய்ப்பு வழங்காமல் சிறையில் சட்டவிரோதமாக சிறையில் வைத்திருக்கிறது.
நளினி மீது தடா பிரிவின்கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் அமைச்சரவை தீர்மானம் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, "தடா சட்டப் பிரிவுகளின்கீழ் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளாரா?" என நளினி தரப்பு வரும் 25 ஆம் தேதி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
