அரசின் மீது கடும் அதிருப்தி -மைத்திரிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பலர் யோசனை முன்வைத்துள்ளனர்.
கட்சியின் தலைவர் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்த செயற்குழு உறுப்பினர்கள் சிலர் இன்றே அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் முடிவை மேற்கொண்டு அதனை நாளை காலை உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சில அதிகாரிகள் சுதந்திரக் கட்சியை சிற்றன்னையை போன்று கவனிப்பதாகவும் அந்த நிலை பசிலின் வருகையின் பின்னர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாகவும் உறுப்பினர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி கட்சியை பலப்படுத்தும் திட்டங்களை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டுமெனவும் மத்திய குழுவில் பல உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டியது கட்டாயம் எனவும் ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்றும் சில மத்தியகுழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டே கட்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தர்ப்பம் வரும்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சாமர்த்தியம் என சில மத்தியகுழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது விசேட அம்சமாகும்.
அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய குழுவில் தெளிவுபடுத்தியுள்ள பேராசிரியர் தம்ம திசாநாயக்க, ரோஹன லக்ஷ்மன் பியதாச போன்றவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தக் கருத்துக்களுக்கு செவிமடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இது உரிய நேரம் இல்லை எனவும் கட்சியின் பிரதேச மட்ட அமைப்பு வேலைகளை இப்போதைக்கு முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் சுயாதீனமாக செயல்படுவதற்கும் அனுமதி கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.