பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய யுவதி! சிறிலங்கா காவல்துறையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு (காணொளி)
இலங்கையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய இளம்பெண் ஒருவருடைய வழக்கை மூடி மறைக்க சிறிலங்கா காவல்துறையினர் முயல்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சமூக ஆர்வலரும், சுற்றுலாப் பயணியுமான Kayleigh Fraser இலங்கை வந்திருந்த நிலையில், தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாக கொழும்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வெலிகம (Weligama) காவல்துறையினர் என்னை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.
மூடிமறைக்க முயற்சித்த வெலிகம காவல்துறை
விசாரணைக்காக சென்ற போது, தன்னிடம் பேச விரும்புவதாகக் கூறி வெலிகம காவல்துறையினர் தன்னை அழைத்ததாகவும், தான் காவல் நிலையம் சென்றபோது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நான்கு பேரும் அங்கிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தன் மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டினை உண்மையானது அல்ல என்று கடிதம் தருமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். எனினும், தான் அவ்வாறு எழுதிக் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கை விடுத்த காவல்துறை
வெகுநேரமாக காவல்துறையினர் தன்னை காத்திருக்க வைத்ததாகவும், இதன்போது, தான் அழுததாகவும், அதைக் கண்ட காவல்துறையினர் தன்னைக் கேலி செய்ததாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் சமூக ஊடகத்தின் வாயிலாக அவர் காணொளி வெளியிட்டுள்ளார்.
காவல்துறையினர் சொல்வதுபோல கடிதம் எழுதித்தராவிட்டால் இலங்கையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.