ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய விவகாரத்தில் தலையிட ட்ரம்ப் தரப்புக்கு முக்கிய கடிதம்
ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு தலைமை தாங்கி நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் என வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.
அமெரிக்கா காங்கிரஸினருக்கு நன்றி தெரிவித்து, அனுப்பியுள்ள கடிதத்திலையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஈழவிடுதலை மற்றும் சுதந்திர இயக்கத்தின் புனிதபிறப்பிடமான வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து எமது வல்வெட்டித்துறை மக்கள் சார்பாகவும் ஒட்டுமொத்த ஈழத் தமிழ் தேசத்தின் சார்பாகவும் அமெரிக்க ஜக்கிய நாடுகளின் காங்கிரஸ் உறுப்பினர்களான ஹெர்பர்ட் சி.கொனாவே ஜூனியர், டொனால்ட் ஜி.டேவிஸ், டேனி கே.டேவிஸ், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சம்மர் எல்.லீ ஆகியோருக்கு எமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதேச விசாரணை
ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்குமாறும், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதியுடன் நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக ஒரு பொது வாக்கொடுப்பை நடத்துமாறு வலியுறுத்தி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவை கடந்த 21ஆம் திகதி அன்று எழுதிய கடித்தை முன்னின்று வழிநடத்தியதற்காக இந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

தமிழர்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையும், நிரந்தர அரசியல் தீர்வைக் கண்டறிவதற்காக வடகிழக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் ஒரு பொது வாக்கொடுப்பை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வலியுறுத்தி செப்டம்பர் 11.2018 அன்று ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது என்பதை நினைவுகூருவது அவசியமாகும்.
ஒடுக்குமுறை சக்திகளால் வரலாற்று ரீதியாக தீர்வுகளாகத் திணிக்கப்பட்ட கட்டுப்பாடு நிலைமைகளுக்கு உறுதியான எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பே மிகவும் பொருத்தமான ஜனநாயக சர்வதேச சட்ட வழிமுறையாகும்.
1619-ஆம் ஆண்டில் போர்த்துக்கேசியர்களால் ஈழத் தமிழர்களின் இறைமை வன்முறையாகப் பறிக்கப்பட்டமை உலகின் நீண்டகால அநீதிகளில் ஒன்றாக இன்றும் நீடிக்கிறது.
நியாயமான இறைமை
பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கீசிய, டச்சு மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகளின் கீழ் தமிழ் மக்கள் திட்டமிட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டனர்.
1948-ல் பிரித்தானியர் இந்தத் தீவை விட்டு வெளியேறிய போது, அவர்கள் தமிழர்களை சிங்களவர்களின் கீழ் பலவந்தமாக ஒப்படைத்து, சிங்களவர்களுக்குச் சுதந்திரம் வழங்கினர்.

ஆனால் தமிழர்களுக்கு வழங்கவில்லை, அது ஒரு முறையற்ற, முழுமையற்ற மற்றும் சட்டவிரோதமான காலனித்துவ நீக்கமாகும்.
ஈழத் தமிழ் தேசம் முழுமையான நீதிக்குத் தகுதியானது அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்காக மட்டுமல்லாமல் போர்த்துகீசியர், சிங்கள சிறிலங்கா டச்சுக்காரர் மற்றும் பிரித்தானியரால் இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்காகவும் நீதி தேவை.
தமிழ் இராச்சியத்தின் அழிவுக்கும் அதன் பின்னர் எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதில் ஏற்பட்ட தோல்விக்கும் இந்தச் சக்திகள் வரலாற்று ரீதியாகப் பொறுப்புக் கூறவேண்டும்.
அமெரிக்கா தலையிட்டு தலைமை தாங்கி எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் உண்மையான விருப்பமும் எங்களுக்கு உண்டு” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |