பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி
கடந்த காலத்தில் அரசியல் செய்த பிள்ளையான் (Pillayan) போன்றவர்களை தோற்கடித்து தான் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.
நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தின் குறைபாடுகள் எங்களுக்கு புரிகின்றது. அரசாங்கம் புதியது அவர்களுக்குரிய வேலைகளைச் செய்வதற்கு காலம் வழங்க வேண்டும் என்பதை அறிவோம்.
சுவர்களில் சித்திரம் வரையும் வேலைத்திட்டம்
அத்துடன் விமர்சனங்களையோ குறைபாடுகளையோ எதிர்வரும் காலங்களில் நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை. எனினும் ஒரு சில விடயங்கள் குறித்து நாங்கள் மௌனமாக இருக்க முடியாது.
இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பினும் மட்டக்களப்பில் எமது கட்சியே வெற்றி பெற்றது.
மக்களின் வாக்குகளின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பணியாற்றுவது பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கடமை.
பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவது என்பது சிறந்த விடயம். இதே போன்றதொரு சுவர்களில் சித்திரம் வரையும் வேலைத்திட்டமொன்று கோட்டாபய அரசாங்க காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதை மேற்கொண்டிருந்தவர்களே கோட்டாபய (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கினர். எனவே அந்த நிலைமைக்கு நாமும் செல்ல கூடாது.
பயங்கரவாத தடைச் சட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டைக்கு தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் சகல மாவட்டங்களுக்கும் என்னுடன் வருகை தந்தனர்.
அதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவர அதன்போது கோரவில்லை. அதனை நீக்க வேண்டும் என்றே கோரப்பட்டது.
ஆனால் தற்போது அரசாங்கத்தின் கொள்கை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதே ஆகும்.
நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபியினரை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அரசியல் கைதிகள் குறித்து இதைவிட அதிகமாக அறிந்திருக்க வேண்டும்.
அதேபோன்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலை அனுமதிபத்திரம் தொடர்பிலும் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |