சுற்றிவளைக்கப்பட்ட நாடாளுமன்றம்! சவேந்திர சில்வா - பொன்சேகா சந்திப்பு
மக்கள் போராட்டத்தின்போது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா என்னிடம் ஆலோசனை பெற்றது உண்மைதான். அப்போது மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என நான் அறிவுறுத்தல் வழங்கினேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
''நாடாளுமன்ற வளாகம் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சவேந்திர சில்வா இரு தடவைகள் என்னுடன் கதைத்தார்.
போராட்டத்துடன் எனக்கு தொடர்பு இருந்தது. நான் நாடாளுமன்ற உறுப்பினரும்கூட. எனவே, நாடாளுமன்ற உறுப்பினருடன் கதைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு தடை இல்லை.
பாதுகாப்பு தடை
அத்துடன், நான் இராணுவ பிரதானியாக இருந்தவன். அந்தவகையில் கதைத்திருக்கலாம். மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம். முடியுமென்றால் அரசியல்வாதிகளை வெளியேற்றுங்கள்.
உங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பாதுகாப்பு தடையை மக்கள் உடைத்தால்கூட சுட வேண்டாம். அரசியல்வாதிகளை அங்கிருந்து வெளியேற்றுவதுதான் சிறந்தது என நான் ஆலோசனை வழங்கினேன்.
இராணுவத் தளபதி கவலையுடன்தான் அப்போது இருந்தார். அவரின் வீடும் அங்குதான் இருந்தது. என்னிடம் மட்டுமல்ல ஏனைய இராணுவத் தளபதிகளிடமும் ஆலோசனை பெறும் உரிமை அவருக்கு உள்ளது. அதில் தவறு கிடையாது என தெரிவித்தார்.
