முற்றாக முடக்கப்படும் ஷிரான் பாசிக்கின் வலையமைப்பு! சொத்துக்களை நிர்வகித்த ஆசிரியர் தப்பியோட்டம்
கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப்பொருள் மற்றும் வணிக வலையமைப்புகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்த சட்டவிரோத கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 சந்தேகநபர்களை வரும் நாட்களில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பாசிக்கின் சட்டவிரோத சொத்துக்கள் ஒரு பிரபல மேலதிகவகுப்பு ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள இந்தச் சந்தேகநபரைக் கைது செய்ய இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடியுள்ள முக்கிய புள்ளிகள்
அத்துடன், இந்த வலையமைப்பின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரும் பாசிக்கின் நெருங்கிய தோழியுமான பெண் ஒருவர் தற்போது துபாயில் உள்ளார். அவரைக் கைது செய்ய கொழும்பு மத்திய குற்றப்பிரிவு துபாய் காவல்துறை சிறப்பு அறிவித்தல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஷிரான் பாசிக் பயன்படுத்திய கைபேசிகளின் மின்னணுத் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சொத்துக்களைக் கட்டுப்படுத்திய குழு உட்பட இந்த வலையமைப்பின் முக்கிய புள்ளிகள் தப்பியோடியுள்ள போதிலும், பெறப்பட்ட மின்னணுத் தரவுகளின் அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களையும் விரைவில் கைது செய்ய முடியும் என காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |