பஸில் பதவியேற்ற தினத்தில் ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம்
பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு பொதுஜன பெரமுனவால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்மொழியப்பட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்படி பிரதேசசபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு 16 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளருக்கு 20 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. பண்டுவஸநுவர பிரதேச சபையில் பொதுஜன பெரமுன சார்பில் 18 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 11 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்யின் சார்பில் 7 பேரும் ஜே.வி.பியின் சார்பில் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர்.
குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸநுவர தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் அரசியல் கோட்டையாகும்.சபையிலுள்ள சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அவரின் சகாக்களாவர். ‘மொட்டு’ கட்சியிலுள்ளவர்கள் அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோவின் சகாக்களாவர்.
தயாசிறி ஜயசேகரவை மொட்டு கட்சியினர் அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்தநிலையில் அவரின் கோட்டையில் மொட் மண் கவ்வியமை அரசியல் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.குறிப்பாக பஸில் நாடாளுமன்றம் வந்த நாளில் இவ்வாறு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.