சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்: மூன்று காவல்துறை குழுக்கள் நியமனம்!
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று (16.01.2026) இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்ளுக்கு இடையிலான மோதலின் விளைவாகும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிகிச்சை
துப்பாக்கிச் சூட்டில் 4 வயது சிறுவனும் 3 வயது சிறுமியும் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் உடல் நிலையும் தற்போது சீராக உள்ளதாகவும், வைத்தியக் குழுக்கள் குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் தமிழர் ஒருவர் எனவும் , துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜிந்துபிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |