அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டின் சந்தேகநபர்கள் பயணித்த கார் கண்டுபிடிப்பு!
புதிய இணைப்பு
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04.11.2025) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் காரில் வந்த அடையாளம் தெரியாத குழு ஒன்று, நபர் ஒருவரை குறிவைத்து தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கரந்தெனிய சுத்தா என்ற நபரின் மூத்த சகோதரியின் கணவர் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று (04.11.2025) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நிலையில் அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |