அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்
சுங்கத் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa )தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர், அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிப்பது தொடர்பான தரவுகள் எம்மிடம் இல்லை.
சுங்கம் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் விபரங்களுக்கு அமைய, தற்போது சந்தையில் மூன்று மாதங்களுக்கு போதுமான பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் சில பொருட்கள் பல்வேறு காரணங்களால் மற்றவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பிராந்திய தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விற்பனையாளர்கள் பொருட்களை பதுக்கினால் அல்லது சில பொருட்களை விற்பனை செய்ய நிபந்தனைகளை விதித்தால் அவர்கள் தண்டிக்கப்படலாம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றார்.
