இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?
மருந்து கையிருப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் என உள்ளூர் மருந்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சந்தையில் பரசிட்டமோல் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் உற்பத்திக்கு தேவையான பொருட்களை நிறுவனங்கள் இறக்குமதி செய்யாமையே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டொலர்களை பெறுவதற்கு பல வழிகள் காணப்படுகின்ற நிலையில், தற்போதைய நிர்வாகம் அத்தகைய நடைமுறைகளை நாடத் தவறியுள்ளது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட முடியும் என்பதோடு, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கவும் முடியும். பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.
கடனை மறுசீரமைப்பதற்கு பதிலாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் நட்பு நாடுகளிடம் 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இறையாண்மை பத்திரங்களை கொள்வனவு செய்தமையே இதற்குக் காரணம்” என்றார்.
