வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கான ஒதுக்கீடு : சிறீதரன் எம்.பி கடும் எதிர்ப்பு
வரவு செலவுத் திட்டத்தில் 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல எனவும் இதனை நாங்கள் எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (18.02.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த அரசாங்கத்தினுடைய முதலாவது வரவு செலவுத்திட்டத்திலே 4218. 2 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வரவுக்கான வழிகள் என்ன என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
குறிப்பாக இந்த செலவுகளிலே 2898.1 மில்லியன் 69 சதவீதமானவை நடைமுறைச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 31 சதவீதமானவை மட்டுமே முதலீடுகளாக இருக்கின்றது.
பாதுகாப்புச் செலவாக மொத்த வரவு செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 11 வீதத்தை ஒதுக்கியுள்ளீர்கள். இந்த நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய சரசரப்புக்கள் இல்லை ஆனால் 442 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை சுகாதாரத்திற்காக, கல்விக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் கூட பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
நாட்டிலே இன்னும் பல மக்கள் குடியேற்றப்படவில்லை, மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்ட நிலையிலேயே இராணுவ பிரசன்னங்களோடு மிதமிஞ்சிய இராணுவ ஆளணியோடு இருக்கின்ற இலங்கை 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.
இந்த நாட்டினுடைய பொருளாதாரம் வளரவேண்டுமென்றால் இங்கிருக்கின்ற இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
