பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி திருமலையில் கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி கையெழுத்துப் போராட்டமொன்று திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா சிலைக்கு அருகாமையில் இன்று (26) மாலை இடம் பெற்றது.
வாலிபர் முன்னணி ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இதில் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் , பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பயங்கரவாத சட்டத்தை ஒழிக்க வேண்டும் என கோரி கையெழுத்தினை இட்டார்கள்.
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துரைக்கையில் இக் கொடூரமான பயங்கரவாத சட்டத்தை ஒழிக்கக்கோரி தமிழர்கள் மட்டுமல்ல ஏனைய சமூகத்தவரும் இதற்காக பங்களிப்பு செய்கின்றனர்.
நீர்கொழும்பில் நேற்றைய தினம் மிகப் பிரமாண்டமாக கையெழுத்து போராட்டம் இடம் பெற்றன.
மேலும் இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்துரைக்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க கையெழுத்துப் போராட்டம் மட்டுமல்லாது ஏதோ ஒரு வகையிலும் போராடிக் கொண்டே இருப்போம் இதற்காக முஸ்லிம் சமூகம் உட்பட ஏனைய சமூகமும் குரல் கொடுத்து வருகின்றன. நாளைய தினம் மட்டக்களப்பிலும் இடம் பெறும் என தெரிவித்தார்.
இதன் போது ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுருந்தனர்.
1979 ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டமே (தற்காலிக) எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிகக் கொடூரமான சட்டமாக தற்போது காணப்படுகிறது.
1979ம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச் சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல (தற்காலிக ஆறு மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 வருட காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும் கஷ்டங்களையும் வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரனை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல்துறையினரிடம் வழங்கப்படும் எந்த வாக்கு மூலத்தையும் கண்டு கொள்வதில்லை இது நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படாது.
பயங்கர வாத தடுப்புச் சட்டத்தில் மாத்திரமே விதி விளக்காக ஒரு உதவிக் காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்கு மூலம் குற்ற ஒப்புதலாக ஏற்று கொள்ளப்படும்.
இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது காவல் துறையின் விசாரனை திறனை மலுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை.
உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேலையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கும் ஒரு தீர்ப்பினை வலுவாகாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர்விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.






