உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா....
ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் (Singapore) மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி சிங்கப்பூர் குடிமக்கள் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கை 94வது இடத்தில் உள்ள அதேசமயம் உலகின் 44 நாடுகளுக்கு விசா இன்றி செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
விசா இல்லாமல் பயணித்தல்
குறித்த பட்டியலில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் குறித்த நாட்டு மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாம் இடத்திலுள்ள ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பேர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் சுவீடன் உள்ளிட்ட 8 நாட்டு மக்கள் 191 நாடுகளுக்கு விசா இன்றி செல்வதற்கு அனுமதித்துள்ளன.
பெல்ஜியம், நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.
83வது இடத்தில் இந்தியா
இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துக்கல் ஆகியவை 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணிப்பதற்கு தனது குடிமக்களுக்கு அனுமதித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, தனது குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா தனது குடிமக்களுக்கு 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன் குறித்த பட்டியலில் 83வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையானது குடிமக்கள் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை, அவற்றின் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் நாட்டின் இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
கடவுச்சீட்டு குறியீடு
பல ஆண்டுகளாக, ஆசிய நாடுகள் ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டை வழிநடத்துகின்றன. தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பொதுவாக உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் முதல் இடங்களைக் கோருகின்றன.
இதனால் தங்கள் குடிமக்கள் விசா இல்லாமல் பல நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கின்றனர். உலகெங்கிலும் இந்த நாடுகள் நிறுவிய மற்றும் பராமரிக்கும் வலுவான இராஜதந்திர உறவுகளை இது காட்டுகிறது.
இதற்கிடையில், குறைந்த சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளாக ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |