சிங்கப்பூர் அதிபர் தேர்தல் - முதலிடத்தில் இலங்கைத் தமிழர்
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் உள்ளார்.
இந்த தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக
தேர்தல் பிரசாரம் வரும் 30-ம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதுடன் செப்ரெம்பர் முதலாம் திகதி வாக்களிப்பு நடைபெறும். சுமார் 27 இலட்சம் பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் என்பதால் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய 2 வேட்பாளர்களும் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.