நாட்டை விட்டு வெளியேறுமாறு கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிப்பு
எழுத்து மூலம் அறிவிப்பு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசா காலம் நீடிக்கப்படாது எனவும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 நாட்களுக்கு மட்டுமே கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை நாட்டில் தங்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் போராட்டம்
சிறிலங்காவில் இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக மாலைதீவுக்கு தப்பிச்சென்ற கோட்டாபய, மாலைதீவிலும் கடும் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கோட்டாபய ஒரு போர் குற்றவாளி என்றும், அவரை ஏன் சிங்கப்பூர் அரசு நாட்டிற்குள் அனுமதித்தது என்றும் சிங்கப்பூரில் போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் அழுத்த நிலையில் கோட்டாபயவை சிங்கப்பூரில் இருந்து வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு எழுத்து மூல அறிக்கையை வெளியிட்டுள்ளது.