தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தனியான ஈழம் இல்லை
“1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா?
அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் போகிறீர்கள்” என நான் கேட்டேன்'. அவர் சிரித்துக் கொண்டு, மச்சான் தனியான ஈழம் இல்லை அதற்கு கீழே தான் எமது எதிர்பார்ப்பு என்றார்.
ஆனால் தனி ஆட்சியொன்றை கோரிய அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் வேறு யாராக இருந்தாலும் கற்பனையில் இருந்தனர். மேலும் ஜே.ஆர் மற்றும் பிரேமதாச ஆகியோரும் அவ்வாறே செயற்பட்டனர்.
இந்தியாவை புரிந்து கொள்ளாத ஜே.ஆர் மற்றும் பிரேமதாசா
இந்தியாவுடன் அவர்கள் மென்மையான போக்கை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஈழம் என்ற இராச்சியம் இலங்கையில் ஏற்பட்டால் இந்தியா பல துண்டுகளாக உடைந்து விடும்.
ஆதலால் டில்லி எந்த காலத்திலும் ஈழம் என்ற இராச்சியத்தை விரும்பாது. இதை ஜே.ஆர் அறிந்திருந்தால் ஈழப்போரை சுமுகமாக முடித்திருக்கலாம். ஆனால், டில்லியுடனான இணைப்பை ஜே.ஆருக்கு சரியான முறையில் பேண முடியவில்லை.
இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'
எனக்கு தெரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், அதாவது இந்தியாவில் ரோவில் பயிற்சி எடுத்தவர்கள், பயிற்சிக்கு போகும் போது முதலில் இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'அடிக்க வேண்டுமாம். ஏன் இவ்வாறு என அவர்களுக்கு புரியவில்லை.
எனது கருத்து இந்தியாவை, அதாவது டில்லியை இவர்கள் யாரும் நன்றாக புரிந்து வைத்திருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
