13 ஆவது திருத்தத்தை நீக்க சிங்கள தரப்புக்கள் முயற்சி
அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலுள்ள 13 ஆவது திருத்தத்தை இல்லாது செய்வதற்கு சிங்கள தரப்புக்கள் முயற்சி செய்வதாக புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
எனவே அரசியலமைப்பிலுள்ள அதிகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் கூறினார்.
தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்றது.
யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவுத்தூபியில் இன்று காலை 7 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் போது, ஈழத்தமிழரின் சமகால அரசியல் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாண பல்கலைக் கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆற்றியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்த நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது உரையாற்றிய புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார்.


