ஹெரோயின் மற்றும் சிறுதொகை பணத்திற்காக சகோதரி செய்த இழிவான செயல்
15 வயது சிறுமியை விற்ற சகோதரி
ஒரு கிராம் போதைப்பொருள் மற்றும் பதினைந்தாயிரம் ரூபா பணத்திற்காக தன்னுடைய 15 வயது சகோதரியான சிறுமியை ஹெரோயின் கடத்தல்காரருக்கு விற்ற சகோதரி கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பணம் மற்றும் ஹெரோயின் கொடுத்து சிறுமியை வாங்கிய ஹெரோயின் கடத்தல்காரரும் 5120 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரி 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என்றும் இவர் போதைக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டு
ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் சிறையில் உள்ளார். சிறுமியின் தாய் சிறைச்சாலைக்கு சென்ற பின்னர் குறித்த சகோதரியே சிறுமியை பராமரித்து வந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேற்கு நில்பனாகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்டு 5120 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகள் விசாரணை
இதன்போது சந்தேக நபரின் வீட்டில் இருந்த சிறுமி யார் என்று காவல்துறை அதிகாரிகள் கேட்ட போதே சிறுமி விற்கப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்தது .
சந்தேக நபரின் தாயார் இந்தச் சிறுமி குறித்த தகவலை வெளிப்படுத்தியதையடுத்து, சிறுமியை மீட்டதுடன், சிறுமியை விற்றதாகக் கூறப்படும் சகோதரியும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
